மதுரை முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் கொழுக்கட்டை படையல்

10 September 2021



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் முக்குறுணி விநாயகருக்கு பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு பதினெட்டு படியில் இன்று கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கோவிலின் வளாகத்தில் அமைந்துள்ள முக்குறுணி விநாயகருக்கு
18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம். அதன்படி முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு முக்குறுணி விநாயகர் சன்னதியில் கொழுக்கட்டை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நெய் வேத்தியம் நடைபெறும். 

இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இதனை பக்தர்கள் வீட்டிலிருந்தே நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பட்டாச்சாரியார் கலந்து கொண்டனர்.