முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - அரசுக்கு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் வேண்டுகோள்

27 October 2020

சுதந்திர போராட்ட தியாகி முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா
மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜையை யொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மூவேந்தர்முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் தலைமையில் கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைதொடர்ந்து கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர் பசும் பொன்முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜைக்கும் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களும், மூவேந்தர் முன்னேற்ற கழகம் மற்றும் பல்வேறு கட்சியினர் பெருந்திரளாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவோம். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது.

அதில் அரசியல் தலைவர்கள் ஒரு காரில் 5 பேர் மட்டுமே சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் பசும்பொன்னிலும், காளையார் கோவிலுக்கும் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு என்று கூறுவது தென் மாவட்ட மக்களுக்கு மனவேதனையும், வருத்தத்தையும் அளிக்கிறது.


பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் எனவே பொதுமக்களின் நிலை அறிந்து அரசு அஞ்சலி செலுத்த விரும்பும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்தும், பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கை மேற்கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

1984ம் ஆண்டில் இருந்து பசும்பொன்னிற்கும், காளையார்கோவிலுக்கும் எங்களுடைய முதல் தலைவர் பிரேம்குமார் வாண்டையார் தலைமையில் 500&க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்தி வருகிறோம். இது தவிர அங்கு வரும் மக்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்குவோம்.

ஆனால் அரசு அன்னதானம் வழங்குவதற்கும், முளைப்பாரி எடுப்பதற்கும் தடை விதித்துள்ளது. பல ஆண்டுகளாக செய்த இந்த செயல் தற்போது தடைப்பட்டு இருப்பது வேதனையாக இருக்கிறது. எனவே தான் நான் நேற்று காளையார்கோவிலுக்கு செல்லாமல் மதுரையில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினோம்.

அதே போன்று 30ந் தேதி பசும்பொன்னிற்கு நாங்கள் செல்லாமல் கும்பகோணத்தில் மூவேந்தர்முன்னேற்ற கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேவரின் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம். இது தவிர ஒரு வண்டியில் தான் செல்ல வேண்டும், அதற்கு அனுமதி பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு விதித்த பல்வேறு உத்தரவுகளை மீறி நாங்கள் அந்த இரு இடத்திற்கு செல்ல விரும்பவில்லை. எனவே சமுதாய மக்கள் உள்ளிட்ட அனைவரும் தேவருக்கு அஞ்சலி செலுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்பது எங்களின் பல ஆண்டு கோரிக்கை அதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ராமலிங்கம்
மதுரை மாவட்டம் செய்தியாளர்