இந்தியாவில் மீண்டும் வரும் பப்ஜி: உற்சாகத்தில் ரசிகர்கள்

14 April 2021

மீண்டும் வருகிறது பப்ஜி - கூகுள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பேர் முன்பதிவு!
2 மாதங்களில் மட்டும் இதுவரை சுமார் 10 மில்லியன் பேர் பப்ஜி நியூ ஸ்டேட் வீடியோ கேமுக்கு முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

பப்ஜி விளையாட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், சுமார் 10 மில்லியன் பேர் கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் புதிய வடிவமைப்பில் பப்ஜி விளையாட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக பப்ஜி நிறுவனம் டிவிட்டரில் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு தொடங்கியது. 2 மாதங்களில் மட்டும் இதுவரை சுமார் 10 மில்லியன் பேர் பப்ஜி நியூ ஸ்டேட் வீடியோ கேமுக்கு முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். வீடியோ கேம் ஒன்றுக்கு முன்பதிவு செய்து காத்திருக்கும் நபரின் எண்ணிக்கையில் பப்ஜி கேம் புதிய சாதனையை படைத்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக பப்ஜி இருந்தது. சீனா எல்லையில் அத்துமீறியதைத் தொடர்ந்து பப்ஜி உள்ளிட்ட சீன நிறுவனங்கள் தொடர்பான செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. மேலும், பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் தனிநபர் தகவல்களும் திருடப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனை திட்டவட்டமாக மறுத்த பப்ஜி நிறுவனம், இந்தியாவில் மீண்டும் பப்ஜியை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.