தென் ஆப்ரிக்காவில் தொடரும் வன்முறை: இந்தியர்களுக்கு அச்சம்!!

20 July 2021


தென் ஆப்பிரிக்கா…. மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட பூமி… பல நூற்றாண்டுகளாக அங்கு இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களும் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில், அங்கு காட்சி மாறியிருக்கிறது…. சாலைகளில் மக்கள் போராட்டம், உருவபொம்மை எரிப்பு, கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு என தென் ஆப்பிரிக்காவே, தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது. இதனால் உயிர் பலி அதிகரித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாகியிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் இந்த பெரும் கலவரத்திற்கு காரணம், ஒரே ஒரு நபரின் கைது மட்டுமே. அது, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவின் கைது தான்.

2009 முதல் 2018 வரை தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா, தனது 9 ஆண்டு கால ஆட்சி காலத்தில் பெரும் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களும், உயர்மட்ட அரசு அதிகாரிகளுமே ஜூமாவை ஊழல் புகாரில் சிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

1999-ல் தென் ஆப்பிரிக்காவின் ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தின் போது செய்யப்பட்ட ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அதிபர் ஜுமா ஜூலை 7ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூமாவின் கைதை ஏற்க இயலாத அவரது ஆதரவாளர்கள், பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன் தொடங்கிய இப்போராட்டம், தற்போது பெரும் கலவரமாக உருமாறியுள்ளது. போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

வணிக வளாகங்கள், கடைகள், மருந்தகங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. ரூ.8,000 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில், 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கே கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த கலவரத்தில் இந்தியர்கள் வாழும் பகுதிகளும், பல இந்தியர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன எனும் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜுமாவின் கைதுக்கும் இந்தியர்கள் தாக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு என ஆராய்ந்ததில், அது மூன்று இந்திய சகோதரர்கள் பக்கம் நம்மை திருப்புகிறது. அவர்கள் தான் குப்தா சகோதரர்கள். கைது செய்யப்பட்ட ஜூமா செய்த ஊழலில் இந்த இந்திய சகோதரர்களுக்கும் பங்குண்டு எனக் கூறப்படுவதே இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது.

1950-களில் உத்திர பிரதேசத்தில் உள்ள சாஹாரன்பூரில் பிறந்த, குப்தா சகோரர்களான அஜய் குப்தா, அதுல் குப்தா மற்றும் ராஜேஷ் குப்தா, தங்கள் தந்தையின் ஆணைக்கினங்க 1993-ல் தென் ஆப்பிரிகாவிற்கு சென்று அங்கே சஹாரா கம்ப்யூட்டர்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கி, தங்கள் முதலீட்டை ஆரம்பித்துள்ளனர். அப்போது சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்டது, தற்போது 10,000 தொழிலாளர்களுடன், வருடத்திற்கு இந்திய மதிப்பில் 140 கோடி ரூபாய் லாபம் ஈட்டக்கூடிய ஒரு பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டக்காரர்கள்
தென் ஆப்பிரிக்காவில் உள்ள சுரங்கங்கள், விமானப் போக்குவரத்து, தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளிலும் ஜூமாவின் உதவிக்கொண்டு இந்த குப்தா சகோதரர்கள் முதலீடு செய்துள்ளதாக, அந்நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

2018ஆம் ஆண்டு, இந்தியாவில், குப்தா சகோதரர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பாக சோதனை நடைபெற்றது. அப்போது, சுமார் ரூ.100 கோடி, சஹரன்பூரில் உள்ள ஒரு சிவன் கோயிலுக்கு, நன்கொடை அளிப்பது என்ற பெயரில் பண மோசடியில் ஈடுபட்டதாக, வருமான வரித்துறையினரால் பல ஆவணங்களை கைப்பற்றப்பட்டன.

குப்தா சகோதரர்கள் உடன் ஜேக்கப் ஜூமாதென் ஆப்பிரிக்காவில் ஜூமா மீதான ஊழல் புகாரில் சோதனை செய்யப்பட்ட இடங்களில், குப்தா சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களும் அடக்கம். ஜேக்கப் ஜூமாவின் உதவிக்கொண்டு தென் ஆப்பிராக்காவின் சொத்துக்களை தங்கள் வசமாக்க நினைக்கும் "குப்தா சகோதரர்கள் ஒன்றும் எங்கள் அதிபர் இல்லை” என்று, அவர்களுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கர்கள் பல எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பல்வேறு வகையில் குப்தா சகோதர்கள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியினாலேயே, அங்குள்ள இந்தியர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

மேலும், சமூக வலைத்தளங்களில் ”இந்தியர்கள் கருப்பினத்திற்கு எதிரானவர்கள்” என கூறி, இந்தியர்கள் பலர் இணைய வழி தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தபோது, அதற்கு ”Black lives matter” என ஜார்ஜ் ஃபளாய்டிற்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து பல ஆதரவு குரல்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

”தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் 14 லட்சம் இந்தியர்களும் நம் சகோதரர்கள். நாங்கள் எங்கள் நிலத்தை இந்தியர்களுடன் பகிர்ந்து வாழ்ந்து வருவதால், அவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தி அமைதிக்கு வழிவகுக்குமாறு அனைவரிடமும் வேண்டுகிறேன்” என அறிக்கை விடுத்தார் தென் ஆப்பிரிக்க ஜூலு சமூகத்தின் மன்னர் மிசுலு காஸ்வெலிதினி.

”இன்று தென் ஆப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் நாலேடி பாண்டருடன் உரையாடினேன். சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த தங்களது அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அவர் உறுதியளித்தார். இயல்புநிலைக்கு திரும்புதல் மற்றும் அமைதியே எங்கள் முன்னுரிமை” என தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து, நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, "தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்களை பாதுகாக்க வேண்டும்” என தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.