18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்!

01 May 2021

இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

பல்வேறு மாநில முதல்வர்களிடமிருந்து  கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் வயது வரம்பை குறைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசும் வயது வரம்பை அதிரடியாக குறைத்தது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல்  தடுப்பூசி நாடு  முழுவதும் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்  ஒரு பகுதியாக பல்வேறு இணையதளங்கள் உருவாக்கப்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆரோக்கிய சேது, கோவின் போன்ற இணைய தளத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து வந்தனர். 

இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. பல்வேறு மாநிலங்களுக்கும் தடுப்பூசி சரியான நேரத்தில் சென்று சேரவில்லை என்ற புகாரும் எழுப்பப்பட்டது.

எனவே போதிய தடுப்பூசி  கையிருப்பில் இல்லை என தமிழகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்து, இன்று தடுப்பூசி செலுத்த முடியாத சூழல் இருப்பதாக அறிவித்தது. தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 15 மாநிலங்களில் போதிய தடுப்பூசி கையிருப்பில் இல்லாத காரணத்தால் இன்று தொடங்கவிருந்த தடுப்பூசி முகாம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போதிய கையிருப்பு வந்தவுடன் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என அந்தந்த மாநிலத்தில்  உள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது