இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு: கலந்து கொள்ள இருக்கும் முக்கிய பிரமுகராகள் யார்?

16 April 2021

பிரிட்டிஷ் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு எதிர்வரும் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் நிலையில், அதில் கலந்து கொள்பவர்களின் உத்தியோகப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் காலமான நிலையில், சனிக்கிழமை ஏப்ரல் 17ம் திகதி இறுதிச்சடங்கு முன்னெடுக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இறுதிச்சடங்கில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, குடும்ப நிகழ்வாகவே மாற்றப்பட்டுள்ளது.

மொத்தமாக 30 பேர்கள் மட்டுமே கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதால், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார்.

இந்த நிலையில், இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வெளியிட்டது.

ராணியாருடன் அவரது நான்கு பிள்ளைகளும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்பவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி உட்பட, அவர்களின் துணைவர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மட்டுமின்றி இளவரசர் பிலிப்பின் ஜேர்மானிய உறவினர்கள் மூவர் குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். உண்மையில் 800 பேர்கள் கொண்ட நீண்ட பட்டியலில் இருந்து 30 விருந்தினர்களை தெரிவு செய்ய வேண்டி இருந்ததால், ராணியார் சில கடினமான முடிவுகளை எதிர்கொண்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.