முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு!
15 July 2022
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார் .
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார் . உடல் நலம் விசாரித்த மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நன்றி கூறிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , அவரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார் .
மேலும் சென்னையில் வரும் ஜூலை 28 - ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டி.ஆர் பாலு திருமதி கனிமொழி , மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் .