சீன ராணுவ ஆக்கிரமிப்பில் பிரதமர் மோடி அமைதிகாத்துக் கொண்டிருக்கிறார்

24 January 2021

சீன ராணுவ ஆக்கிரமிப்பில் பிரதமர் மோடி அமைதிகாத்துக் கொண்டிருக்கிறார்
ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தாராபுரம், ஜன.24: சீன ராணுவ ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி அமைதிகாத்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக ராகுலின் கொங்கு வணக்கம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.பேசியதாவது: என்னுடைய வருகையை மிகவும் வெற்றிகரமாக்கிக் கொடுத்த தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், ஒவ்வொரு தொண்டருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். கொங்கு மண்டலத்தில் கடந்த 2 நாள்களாக எனக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. வரலாற்று சிறப்பு மிக்க தாராபுரம் வருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சேர மன்னர்களையும், கொங்கு நாட்டு சோழ மன்னர்களை நிறைவாகப்பெற்ற இந்த மண்ணில் நிற்பனை நான் நிறைவாகப் பெருமை கொள்கிறேன்.இ்ந்திய நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகரமாக இருந்து உலகை திரும்பிப்பார்க்க வைத்த ஒரு அற்புதமான நகரம் திருப்பூர். ஏற்றுமதி தொழில் செய்துவதுடன், வேளாண் தொழிலும் நடைபெற்று வருகிறது. நான் சில மணி நேரங்களுக்கு முன்பாக நெசவாளர்களை சந்தித்தேன். நாளை நான் விவசாயிகளை சந்திக்க உள்ளேன்.  
இந்த நாட்டின் மிகவும் அடிப்படை பணிகளை செய்யும் வேளாண் பெருங்குடி மக்கள், நெசவாளர்கள், மீனவர்கள். நாட்டின் நிர்வாகத்தை நடத்துபவர்களுக்குத் தெரியவேண்டும் அடிப்படை கட்டுமானம் இல்லாமல் கூரை எழுப்ப முடியாது. சிறு குழந்தைக்கு கூட அடிப்படை கட்டுமானம் அவசியம் என்பது தெரியும். ஆனால் பிரதமர் மோடி அடிப்படை கட்டுமானத்தை இடித்துடன், அதன் மீது கட்டப்படும் சுவரையும் இடித்து விட்டு மேற்கூரை அமைக்க முயற்சிக்கிறார்.  இந்த நாட்டின் அடித்தளம் என்பது வேற்றுமையில் ஒற்றுமையாகும்.எல்லா கலாசாரங்கள் மீதும் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.பாஜக சொல்கிறது ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்கின்றனர். தமிழ், வங்காளம், பஞ்சாபி ஆகியவற்று கலாசாரம் இல்லை, வரலாறு இல்லையா என்று கேள்வி எழுப்பினர். இந்த நாட்டின் அடித்தளத்தின்மீது நடத்தப்படும் முதல் தாக்குதலாகும். இந்த நாட்டின் கட்டுமானம் என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கும் மரியாதை, ஒவ்வொரு கலாசாரத்துக்கும் இருக்கும் மரியாதை, ஒவ்வொரு மாநிலத்துக்கான வரலாறு என்ற அடிப்படையை வைத்துத்தான் இந்தியா என்கிற தேசம் எழும்பியிருக்கிறது. பிரதமர் மோடி ஒரு போதும் தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் அவமானப்படுத்த நான் அனுமதிக்கமாட்டேன். பிரதமர் மோடி பதவி ஏற்றவுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை சிதைத்துள்ளனர். சிறு, குறு தொழில்களையும் முழுமையாக நசுக்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் அவருக்கு வேண்டிய, நெருக்கமான 5 நண்பர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான். ஜி.எஸ்.டி.வரியான 5 விதமாக விதிக்கப்படுகிறது. இது சிறு, குறு தொழிலையும், சிறிய வியாபாரிகளையும் நசுக்கத்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தின் தொழில் முதுகெலும்பை உடைக்கத்தான் ஜி.எஸ்.டி.வரி கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை சிதைப்பதற்காகத்தான் ஜி.எஸ்.டி.வரி கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று வந்தவுடன் பிரதமர் மோடி தனது 5 நண்பர்களின் 10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். அதே வேளையில் எத்தனை ஏழை, எளிய மக்களின் கடன்களை மோடி தள்ளுபடி செய்துள்ளார்.  மேக் இன் இந்தியா உண்மை எனில் ஜி.எஸ்.டி.வரி, பணமதிப்பிழப்பு ஏன் கொண்டு வந்திருக்க வேண்டும். சீனா ராணுவம் இந்திய எல்லையில் தாய் மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வேளையில் 56 இன்ச் அகலமான மார்புடைய இந்திய பிரதமர் மோடி அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சீன நாட்டினருக்கு நன்றாகத் தெரிகிறது இந்த நாட்டை வழிநடத்திச் செல்பவர் மிகவும் பலவீனமானவர் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக முழுமையாக சீரழித்து விட்டார். ஆகவே, அதன்காரணமாகத்தான் சீன நம் நாட்டில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.