கோடை காலத்தில் கோழி வளர்ப்பு முறை - மருத்துவர்கள் ஆலோசனை

21 January 2022

கோழி வளர்ப்பு கிராமப்புறங்களில் தொன்று தொட்டு வரும் தொழிலாகும். இதன் வாயிலாக, குறைந்த முதலீட்டில் விவசாயிகள் குறிப்பிடத்தக்க வருவாய் ஈட்டுகின்றனர். கோடைக்காலத்தில், கோழி வளர்ப்பில் சவால்கள் அதிகம். கோடையில், பொள்ளாச்சி பகுதி கோழி வளர்ப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.கோழிகளை வெயில் காலங்களில் காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். வெயில் நேரங்களில் நிழலான பகுதியில், அடைத்து வைத்து தீவனம் அளிக்க வேண்டும்.பண்ணையில் மின்விசிறியை பயன்படுத்தி காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும். கோழி கொட்டகையின் பக்கச்சுவற்றில் ஈரமான சாக்கு பைகளை கட்டி வைக்கலாம். குழாய் வாயிலாக கூரை மேல் தண்ணீர் தெளிக்கலாம். கோழிகளுக்கு தண்ணீர் தேவையை சரியான அளவில் பூர்த்தி செய்ய வேண்டும். குளிர்ச்சியான, சுத்தமான தண்ணீர் அளிக்க வேண்டும்.அதிக அளவு வெப்பத்தினால் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகளை கோழிகள் இழந்து விடும். எனவே இந்த சத்துக்கள் அடங்கிய எலக்ட்ரோலைட் பவுடரை கோழிகளுக்கு நீரில் கலந்து அளிக்க வேண்டும். வைட்டமின் சி, பி, டி, ஏ, சத்துக்கள் அடங்கிய மருந்தை அரை மி.லி., என்ற அளவில் நுாறு கோழிகளுக்கு நீரில் கலந்து அளிக்க வேண்டும்.வைட்டமின் சி தேவைக்காக எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து அளிக்கலாம். பாலில் இருந்து கிடைக்கும் மோரையும் கோழிகளுக்கு அளிக்கலாம். அடர் தீவனத்தில் எரிசக்தியின் அளவை குறைத்து, புரதச்சத்து, அமினோ அமிலங்கள், கால்சியம் போன்ற தாது உப்புகளின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும்.ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, ராணிகேட் நோயானது, சிறிய குஞ்சுகள் முதல் பெரிய கோழிகள் வரை தாக்க வாய்ப்புள்ளது. எனவே இதற்கு தடுப்பூசி அளிக்க வேண்டும். ராணிகேட் நோய்க்கு எதிராக, ஆர்.டி.எப்., அல்லது லசோட்டா தடுப்பூசியை, ஏழாவது நாளிலும், நான்காவது வாரத்திலும் கண் அல்லது மூக்கு வழியாக அளிக்க வேண்டும்.ஒன்பதாவது வாரத்தில் ஆர்.டி.வி.கே., என்ற தடுப்பூசி மருந்தை, அரை மில்லி என்ற அளவில் இறக்கை பட்டைக்கு கீழ் பகுதியில் அளிக்க வேண்டும்.அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளின், மூக்கு, வாய், கண், இமை போன்ற பகுதிகளில் கட்டிகள் தோன்றும். இதனால் கண் பார்வை இழப்பு, சுவாசக்கோளாறு போன்றவை அதிகமாக ஏற்படும்.இந்த அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை ஆறு வாரங்களுக்கு மேல் உள்ள கோழிகளுக்கு, அரை மில்லி என்ற அளவில் கோழியின் இறக்கைப்பட்டை பகுதியில் தோலுக்கு அடியில் இட வேண்டும்.இவ்வாறு, சரியான வளர்ப்பு முறைகளை பின்பற்றினால் மட்டுமே, கோழி வளர்ப்பில் நல்ல லாபம் பெற முடியும். கோழி இறப்பை தவிர்க்க முடியும். இவ்வாறு, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி