மலேசிய - சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறக்க வாய்ப்பு

12 October 2020

மலேசிய - சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறக்க மத்திய அரசாங்கத்திடம் சிறப்புத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளது ஜொகூர் மாநில அரசாங்கம்.

ஜொகூர் பாலத்தையும் துவாஸ் இரண்டாம் இணைப்பையும் திறப்பதற்கு அந்தத் திட்டம் பரிந்துரைக்கும்.

இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள பொருளியல் செயல் மன்றக் கூட்டத்தில் அந்தத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றார் ஜொகூர் முதலமைச்சர் ஹஸ்னி முகமது.

எல்லையைத் திறந்துவிடுவதற்கான தேவையை ஆராய்வதுடன், சிங்கப்பூரில் வேலைசெய்யும் மலேசியர்களின் நிலை, ஜொகூரில் செய்யப்படும் முதலீடுகள் குறித்தும் திட்டம் ஆராயும் என்றார் அவர்.

தற்போது உள்ள நிலை மேலும் தொடர்வது ஏன் சாத்தியமில்லை என்பதையும் விளக்கப் போவதாக அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கும் ஜொகூருக்கும் இடையிலான இரு சோதனைச் சாவடிகளில் வசூலிக்கப்படும் வருவாய், மலேசியச் சுங்கத்துறையின் வரி வசூலில் பாதியளவாக இருப்பது, எல்லையைத் திறந்துவிட மற்றொரு காரணம் என்றார் அவர்.

இரு நாடுகளின் சோதனைச் சாவடிகள் முழுமையாகத் திறக்கப்படாதது, பலரின் வேலைகளுக்கும் வர்த்தகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார் திரு. ஹஸ்னி.

மலேசியாவில் கிருமிப்பரவல் அதிகரித்து வந்தாலும் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையைத் திறப்பது பற்றி மத்திய அரசாங்கம் பரிசீலிக்கும்
என்று பொருளியல் விவகாரங்களுக்கான பிரதமர் அலுவலக அமைச்சர் முஸ்தபா முகமது கடந்த வாரம் தெரிவித்தார்.

மலேசியாவில் இன்று 561 பேருக்குப் புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் சபா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.