பொள்ளாச்சி-பழனி இடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்க அனுமதி

20 September 2022

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு மற்றும் போத்தனூர் இடையேயான மீட்டர் கேஜ் ரெயில்பாதை, அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி - பழனி வழித்தடத்தில் திருச்செந்தூர், சென்னை, திருவனந்தபுரம், மதுரைக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த ரெயில் பாதையில் மின் மயமாக்கல் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி-பழனி இடையேயான வழித்தடத்தில் ரெயில்கள் 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரெயிலின் வேகத்தை அதிகரிக்க ரெயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது தண்டவாளத்தின் அதிர்வுகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது ரெயிலின் வேகத்தை அதிகரித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி-பழனி வழித்தடத்தில் தற்போது 70கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து ரெயிலின் வேகத்தை அதிகரிப்பது குறித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது ரெயிலின் வேகம் 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயண நேரம் குறையும். மேலும் அதிவிரைவு ரெயில்களை இயக்குவதற்கு முடியும் என்றனர். இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறுகையில், பொள்ளாச்சி-பாலக்காடு இடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்திலும் சோதனை ஓட்டம் நடத்தி ரெயிலின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி