திருப்பதியில் முதியோருக்கு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி

30 March 2022

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக தரிசனங்கள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்பு தேவஸ்தானம் திறக்கப்பட்டு பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது.கொரோனா தொற்றுக்கு முன்பு வரை முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் சிறப்பு நுழைவு வாயில் வழியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பிறகு, தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான சிறப்பு நுழைவு தரிசனத்தை அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, திங்கள் முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல், கோவிலின் தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசை வழியாக அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு தரிசனத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.