எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

23 July 2021


எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவை மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில் ‘பெகாசஸ்’ விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது. இப்பிரச்னை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், கடந்த 3 நாட்களாக மக்களவை முடங்கியது. 4ம் நாளான இன்றும் ‘பெகாசஸ்’ விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் நேற்று பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தபோது விளக்கம் அளிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் எழுந்தார். அப்போது, அவர் கையில் வைத்திருந்த காகிதங்களை பறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கிழித்து எறிந்தார். இதையடுத்து, அவையில் பெரும் கூச்சல் நிலவியது. இதனால் அவை நேற்று ஒத்திவகைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் அவையிலிருந்து திரிணாமூல் எம்.பி. சாந்தனு இடைநிக்கம் செய்யப்படுவதாக தீமானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என எதிக்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.