புகார் கொடுத்து குற்றவாளியை பிடிக்காத காவல்துறையை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாவரம் தொகுதி பெண் வேட்பாளர்

06 April 2021

ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபரை கைது செய்யும் வரை கீழே இறங்க மாட்டேன் என டவரில் ஏறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் மை இந்தியா பார்ட்டி வேட்பாளர் வீரலட்சுமி.சென்னை பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர் கி.வீரலட்சுமி மை இந்தியா பார்ட்டி சார்பில் போட்டியிடுகிறார். இவர், தேர்தல் பரப்புரையில் இருந்தபோது அவரது செல்போன் எண்ணிற்கு, ஒரு எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்கள் வந்ததாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

உடனடியாக ஆபாச வீடியோ அனுப்பிய நபரை மூன்று நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் அவரை தானே கண்டுபிடித்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என வீடியோ பதிவு ஒன்றையும் சமூக வலைதளத்தில் வீரலட்சுமி பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அந்த மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்யாததால் அதை கண்டித்து சென்னை விமான நிலையம் அருகே உள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்று, ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபரை கைது செய்யும் வரை கீழே இறங்க மாட்டேன் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறக்கினர். பின்பு வீர லட்சுமியை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழ்நிலை காணப்படுகிறது.

பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்