இந்த ஒருத்தரை சமாளிக்க முடியல!

12 June 2021

கல்லூரி பக்கமே போகாதவர்கள் நீட் பற்றி எல்லாம் அறிவுரை சொல்கிறார்கள் என தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.


 நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக அண்மையில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தான் சர்வதேச அளவில் பல நுழைவுதேர்வுகளை எழுதி இருப்பதாகவும், இடிஎஸ் வகை நுழைவு தேர்வுகளை எழுதி இருப்பதாலும், இதுபோன்ற தேர்வுகளால் என்ன நன்மை, என்ன தீமை என்பதை பற்றி பேச எனக்கு தகுதி இருக்கிறது என்றார். மேலும் நாட்டில் உள்ள நிறைய பேரை விட தனக்கு நீட் தேர்வு குறித்து பேசுவதற்கு தகுதி அதிகம் உள்ளது என்றார்.

 

 
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி கல்லூரிக்கு சென்று படித்ததாக தெரியவில்லை. எனவே அவர் நுழைவுத்தேர்வுகள் எழுதியிருக்கவும் வாய்ப்பு இல்லை. இதேபோன்று முன்னாள் அமைச்சர்கள் யாரும் இப்படி டெஸ்ட் எழுதவில்லை என்பதால், கல்லூரி பக்கமே போகாதவர்கள் நீட் பற்றி எல்லாம் அறிவுரை சொல்கிறார்கள் என வேதனை தெரிவித்தார்.

மேலும் 12 வருடம் படித்தவர்களின் அறிவு, ஒரே நாளில், ஒரே தேர்வில் முடிவு செய்ய முடியாது என்ற அவர், தமிழ்நாடு இந்தியாவை விட கல்வியில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டிற்கு யாரும் கல்வியில் அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என பேசினார். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறாது என்பதில் திமுக உறுதியாக இருப்பது இவரது பேச்சில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.