ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு : ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை

18 June 2022

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று (வெள்ளி) விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று (சனி) காலை அளவீட்டின்போது விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது. முற்பகலில் இந்த அளவில் மேலும் உயர்வு ஏற்பட்டு நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியைக் கடந்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐவர்பாணி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியதாவது: "ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அருவி உள்ளிட்ட இடங்களில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும், ஆற்றைக் கடந்து செல்லவும் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும்" என்று ஆட்சியர் கூறியுள்ளார்.