தமிழகத்தில் அக்டோபர் 16 முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்

14 October 2020

சென்னை: தமிழகத்தில் அக். 16-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மாதம் முன் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்து சேவை மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து பொது போக்குவரத்திற்கு தடை விதிக்ப்பட்டது. கடந்த 7 மாத காலத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் ஆம்னி பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பபட்ட போதிலும் ஆம்னிபஸ்களை இயக்குவது தொடர்பாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து பேருந்துகளை இயக்க முன்வரவில்லை.


பேருந்துகள் ஓடாத மாதங்களில் கட்ட வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்சை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும், 100 சதவீதம் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் அக். 16-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 174 நாட்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இதனால் அதைச்சார்ந்த 2 லட்சம் பேரும் அவர்களைச் சார்ந்த குடும்பங்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தோம். இந்நிலையில் தமிழ்நாடு உரிமம் பெற்ற பேருந்துகளுக்கு பேருந்துகளை இயக்காத காலகட்டமான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதத்திற்கு ஆம்னி பேருந்துகளுக்கு இயக்காத நாட்களுக்கு சாலை வரி PVR Nil Assement மூலமாக விலக்கு பெற்று வருகிறோம். இதற்கு உதவிய முதலமைச்சர் போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி. ஆகையால் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதியில் இருந்து தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்.

மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளை பின்பற்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். எப்பொழுதும் போல் பயணிகள் தங்களது ஆதரவை எங்களுக்குத் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.