புத்தாண்டில் என்னென்ன தீர்மானங்களை எடுக்கலாம்?

30 December 2021

புத்தாண்டு(2022) பிறக்கப்போகிறது...கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் பெரிதாக இல்லை என்றாலும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் இந்த ஆண்டையும் வரவேற்க மக்கள் தயாராகிவிட்டார்கள். வரும் ஆண்டிலாவது நினைத்தவற்றை செயல்படுத்த வேண்டும், நினைத்தவை நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
அந்தவகையில், புத்தாண்டுக்கு புதிய தீர்மானங்களை எடுக்கும் கலாசாரம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாழ்க்கையில் ஆண்டுக்கு ஒருமுறையாவது மாற்றங்கள் வேண்டும் என்று நினைப்போருக்கு இது ஒரு வாய்ப்பு எனலாம்.
ஆனால், ஒரு சிலர் மட்டுமே தீர்மானங்களை சரியாக பின்பற்றி வாழ்க்கையில் மாற்றம் காண்கின்றனர். இவை முழுக்க முழுக்க அவரவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பலரும் செயல்படுத்த முடிவதில்லை.
உங்கள் வாழ்கையில் மாற்றம் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களை நீங்களே கட்டுப்படுத்த தெரிய வேண்டும். 'இவற்றை எல்லாம் செய்ய வேண்டும்' என்று முடிவெடுத்துவிட்டால் முடிந்தவரை அவற்றை முழுமையாக செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
இந்த புத்தாண்டில் பொதுவாக என்னென்ன தீர்மானங்களை எடுக்கலாம்? என்று பார்க்கலாம்..

தீர்மானங்கள் ஏன் எடுக்கிறோம்?

வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றம், வாழ்க்கையின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்று நினைத்தால் சில முக்கிய முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும்.
ஒரு ஆண்டு முழுவதும் ஒரே வேலையைச் செய்கிறோம், அதையேதான் திரும்பத் திரும்பச் செய்கிறோம் என்றால் வளர்ச்சி என்ற ஒன்றே அங்கு இருக்காது.

மனரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி சற்று முன்னேற்றம் வேண்டுமெனில், கடந்த ஆண்டில் செய்தவற்றை சற்று சிந்தித்துப் பார்த்து அதில் தேவையற்ற விஷயங்களை நீக்கி, தேவையான விஷயங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். மாற்றம் வேண்டுமெனில் தீர்மானம் எடுப்பது அவசியம். அதனை புத்தாண்டில்தான் எடுக்க வேண்டும் என்று அவசியம்கூட இல்லை. எந்த கணநேரத்தில் தோன்றுகிறதோ அந்த நேரத்தில் எடுத்து செயல்படுத்தலாம்.
என்னென்ன தீர்மானங்களை எடுக்கலாம்?

வழக்கமாக புத்தாண்டு வருவதற்கு முன்பாகவே இந்த ஆண்டு எடுக்க வேண்டிய தீர்மானங்களை பலரும் யோசித்தோ, எழுதியோ வைத்துவிடுவார்கள். அதனை எந்த அளவுக்கு செயல்படுத்தியிருக்கிறோம் என்றெல்லாம் பின்னாளில் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால், புத்தாண்டு தீர்மானங்கள் என்ற ஒரு பட்டியலே இருக்கும். இது ஒன்றும் தவறல்ல. ஆனால் அவற்றை செயல்படுத்த முயற்சித்து தோல்வியாவது அடைந்திருக்க வேண்டும்.

உடற்பயிற்சி

புத்தாண்டு தீர்மானங்களில் பெரும்பாலாக முதலிடத்தில் இருப்பது இதுவாகத் தான் இருக்கும். உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் இருக்கும் பிரச்னை, மேலும் நோயற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சி வேண்டும் என்பதால் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

உணவு

சிலருக்கு வீட்டில் செய்த உணவுகளைவிட ஹோட்டல்களில் செய்யப்படும் உணவுகள் குறிப்பாக உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுவர். கொரோனா எனும் பெருந்தொற்று சத்தான உணவுகளின் அவசியத்தை இன்னும் கூறிக்கொண்டு இருக்கிறது. எனவே, 'சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும், குறிப்பாக ஹோட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும்' என்று தீர்மானம் எடுத்துக்கொள்ளுங்கள்.

சமூக ஊடகங்கள்

ஒருசிலரின் வளர்ச்சிக்கு உதவும் சமூக ஊடகங்களே, பலரது வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கின்றன. ஒரு நாளின் பெரும்பாலான நேரங்களை சமூக ஊடகங்களில் கழிப்பவர்கள் அதிகம். எனவே, வரும் புத்தாண்டு முதல் சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கலாம். இது மன ரீதியான பாதிப்புகளையும் குறைக்கும்.

சேமிப்பு

சேமிப்பு வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளில் பெரிதும் உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்று வரவினைக் காட்டிலும் செலவு அதிகரித்து இருக்கிறது. தவணை முறையில் தேவையான அனைத்தையும் வாங்கிவிட்டு அதனைக் கட்ட முடியாமல் மறுபடியும் கடன் வாங்கும் நிலையில் பலர் இருக்கின்றனர். இனியாவது உங்களுக்கான தேவைகளைக் குறைத்தாவது மாதந்தோறும் சிறிதளவு பணத்தை சேமிப்புக்காக எடுத்துவைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். பழைய கடன்களையும் விரைவில் முடிக்கும் வழிகளை ஆராயுங்கள்.

உங்களுக்கான நேரம் சிலர் வாழ்நாள் முழுவதும் வேலை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்று குடும்பத்தை, நண்பர்களை.. ஏன், தன்னையே மறந்து இருப்பார்கள். அவர்கள் எல்லாம் உங்களுக்கான மகிழ்ச்சிக்கான நேரத்தை இனிவரும் நாள்களிலாவது ஒதுக்குங்கள்.
'வாழ்க்கை வாழ்வதற்குத் தான்' வாழ்வதற்கு, தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பணம் தேவை, அதற்கு வேலை தேவை.. அவ்வளவுதான்.

குறிக்கோள்

வாழ்க்கையில் எல்லோருக்கும் அடைய வேண்டிய குறிக்கோள் என ஒன்றாவது இருக்கும். அதனை அடையும் முயற்சியில் ஈடுபடுவது தள்ளிப்போகலாம். அவ்வாறு இருப்பவர்கள் இந்த புத்தாண்டில் அதற்கான வேலையைத் தொடங்குங்கள். அது புதிய பயிற்சிகள், புதிய வேலை, புதிய துறை என்று இருக்கலாம்.

அறிவை வளர்த்தல்

அடுத்தாக அறிவை வளர்த்துக்கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். புத்தகம் படிப்பது, அறிஞர்களின் கருத்துகளைக் கேட்பது, எழுதுவது, பயணம் செய்வது, சமூகத்தை அணுகுதல் என இவையனைத்தும் அறிவை வளர்க்கும் செயல்கள். இவற்றை செயல்படுத்த முயற்சி செய்யலாம். அறிவை வளர்த்துக்கொள்ளும் ஏதேனும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம்.

கெட்ட பழக்கங்கள்

உங்களிடம் தீய பழக்கங்கள் ஏதேனும் இருந்தால் அதனைக் கைவிட்டு புத்தாண்டில் புத்துணர்வுடன் புது வாழ்க்கையைத் தொடங்குங்கள். தீய பழக்கங்கள் என்பது ஒருவரைப் பற்றி குறைகூறுவது, கோபப்படுவது முதல்.. புகைபிடித்தல், மதுப்பழக்கம் என அனைத்தும் அடங்கும். உங்களிடம் என்ன தவறான பழக்கம் இருக்கிறது என்பதை கண்டறிந்து இந்த புத்தாண்டில் விட்டொழியுங்கள்.

பிடிக்காத விஷயங்கள்

வாழ்க்கையில் சில விஷயங்கள் பிடிக்கவில்லை எனினும் அதனை சில நேரங்களில் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏன் சில உறவுகள் கூட அப்படித்தான். அந்தவகையில் உங்களுக்கு முழுவதும் பிடிக்காத விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள். மனதுக்கு ஒவ்வாதவற்றை செய்யாதீர்கள். பிடிக்காத நபர்களை, உங்களை மதிக்காத நபர்களை விட்டு விலகிவிடுங்கள்.

நல்ல பழக்கங்கள்

நாம் ஒவ்வொருவரிடமும் இருந்து ஒரு நல்ல குணங்களை பார்த்திருப்போம். அவையனைத்தையும் செயல்படுத்த முடியாது என்றாலும் அவற்றில் ஏதேனும் ஒன்றை செயல்படுத்தலாம்.
முடிந்தவரையில் பிறருக்கு உதவி செய்வது, அனைவரிடமும் நட்பு பாராட்டுவது, இன்முகத்துடன் இருப்பது, தினமும் புதிய நபர்களை சந்திப்பது என்று நல்ல பழக்கவழக்கங்களை இந்த புத்தாண்டில் தொடங்குங்கள்.

தீர்மானங்களை செயல்படுத்துங்கள்

தீர்மானங்களை எந்த அளவுக்கு உறுதியுடன் எடுக்கிறோமோ அதே அளவுக்கு அதனை செயல்படுத்த வேண்டிய கடமையும் இருக்கிறது. வாழ்க்கையில் மாற்றம் வேண்டும், மகிழ்ச்சி வேண்டும், வளர்ச்சி வேண்டும் என்ற கோணத்தில்தான் தீர்மானங்களை எடுக்கிறோம்.
தீர்மானங்களை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி உங்கள் கண்ணில் படும்படி ஒட்டிவிடுங்கள். அந்த தீர்மானங்களை கடைப்பிடிப்பதால் ஏற்படும் மாற்றங்களையும் குறிப்பிடுங்கள்.
அடுத்ததாக வீட்டிலோ உங்கள் நண்பர் வட்டாரத்திலோ உங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய ஒருவரிடம் இதைக் கூறி உங்களை கண்காணிக்கச் சொல்லுங்கள். சரியாக பின்பற்றாத நேரத்தில் நினைவுபடுத்தச் சொல்லுங்கள்.
இவை அனைத்தையும்தாண்டி முழுக்க முழுக்க இது உங்களைச் சார்ந்தது. நீங்கள் நினைக்காமல், செயல்படுத்தாமல் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.