நீட் கோச்சிங் செல்லாமலேயே 674 மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவர்

17 October 2020

அரக்கோணத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் 674 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. இந்த தேர்வில் அரக்கோணத்தை சேர்ந்த மாணவர் சக்திவேல் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமலேயே 674 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறாததால், இந்த ஆண்டு முழுவதும் வீட்டிலேயே இருந்து தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அவருக்கு வெற்றி கைக்கூடியுள்ளது. மேலும், இவர் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக்
கல்வியில் பயின்றவராம்.

இது குறித்து பேசிய சக்திவேல், "தான் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்று, பொதுத்தேர்வில் 600க்கு 588 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தேன். நீட் தேர்வுக்கு பயிற்சி பெற போதிய பண வசதி இல்லாததால், வீட்டிலேயே இருந்து படித்தேன். இந்த தேர்வுக்கு பயிற்சி பெற ஆன்லைனில் நிறைய தேர்வுகள் எழுதினேன். தற்போது தான் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

சக்திவேல் தேர்ச்சி பெற்றது குறித்து பேசிய அவரது தாயார், "கடந்த ஆண்டு சக்திவேல் தேர்வில் 358 மதிப்பெண்கள் தான் பெற்றார். நீட் கோச்சிங் செல்லும் அளவிற்கு பணம் இல்லாததால் அவரை ஒரு வருடம் வீட்டிலேயே இருந்து தேர்வுக்கு படிக்க சொன்னோம். விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்பதை சக்திவேல் நிரூபித்து காட்டியுள்ளார்.” எனக் கூறியுள்ளார்.