1,000 நாட்டுக்கோழிகள்; மாத வருமானம் ரூ.1.30 லட்சம்!' அசத்தும் மதுரை இளம் விவசாயி

07 October 2021

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்த உதினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி அருண் என்கிற அருணாசலம். நம்மாழ்வார் மீது கொண்ட பற்றால் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.

 தனது தாயாருடன் அருண்

பல்வேறு இடங்களில் விருதுகளைப் பெற்ற இவர், தனது தென்னந்தோப்பிற்கு அருகே கோழிப்பண்ணை நடத்திவருகிறார்.

கஜா புயலில் பெரும் பாதிப்பைச் சந்தித்தபோதும், மனம் தளராமல் தொடர்ந்து கோழிப் பண்ணையை நடத்தி வருகிறார்.

கோழிப்பண்ணை மூலம் மாதம் சுமார் ரூ.1.30 லட்சம் வரை வருவாய் ஈட்டிவருவதாக நம்பிக்கையோடு பேசுகிறார் அருண். ``பாரம்பர்ய விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு அருகிப்போன இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் ஆசை ஏற்பட்டதைத் தொடர்ந்து விவசாயம் செய்யத் தொடங்கினேன். நான் விவசாய வட்டங்களோடு இணைந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று விவசாயப் பண்ணைகளை பார்வையிட்டு ஆய்வுகளும் செய்துவருகிறேன். கடந்த 3 வருடமாக நாட்டுக்கோழிப் பண்ணை நடத்திவருகிறேன்.

 கோழிப் பண்ணை

எனக்கு அம்மாவும், நண்பர்களும் உதவியாக இருக்கின்றனர். கைராலி, கடக்கநாத், நிக்கோபாரி, அசில் உள்ளிட்ட பல்வேறு நாட்டுவகை கோழிகளை வைத்து பண்ணையைத் தரம் உயர்த்தப் பட்டு வளர்க்கிறேன். கறிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டுக்கோழிகளிடம் பெறும் முட்டைகளை விற்பனை செய்கிறேன். பல்வேறு நாட்டு வகைகளில் சுமார் 1,000 கோழிகள்வரை வளர்க்கிறேன்.

முற்றிலும் இயற்கை முறை உணவுகளும் நேரடிப் பராமரிப்புகளும் கையாண்டு, கோழிகளை வளர்த்து முட்டைகள் பெறுகிறேன். ஐந்தரை மாதத்திலிருந்து கோழிகளிடம் முட்டைபெற முடிகிறது. இரண்டு வருடம் வளர்த்த பின் கறிக்கோழியாக விற்றுவிடுகிறேன்.

 பண்ணையில் அருண்

கறிக்கோழி கிலோ ரூ.200. கோழிக் குஞ்சுகளுக்கு முட்டைகளையும் தேர்வு செய்து வைத்துக்கொள்கிறேன். மக்காச்சோளம், கடல் உணவுகள், கீரை வகைகள் வெங்காயம், பஞ்சகவ்யம், அரிசி, தவுடு எனப் பல்வேறு உணவுகள் அளிக்கிறேன். இந்த உணவுகளைத் தொடர்ந்து கொடுக்காமல் கால நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.

செரிமானக் கோளாறு ஏற்படக் கூடாதென காலை, மதியம் மட்டும் உணவு வழங்குவேன். பண்ணையைச் சுற்றி பாம்பு, பூச்சிகள் அண்டாமல் இருக்க நானே இயற்கை பூச்சி விரட்டிகள் தயார் செய்து பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கிறேன். சத்தான உணவுகள் அட்டவணைப்படி கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் தாக்குவதிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க முடிகிறது.

 கோழிகளுக்குப் பயிற்சி

அம்மை நோய் உள்ளிட்ட சில நோய்த் தாக்குதல் அரிதாக ஏற்படும் போது மஞ்சள் கலந்து கோழிகள் மீது பூசிவிடுவேன். தினமும் ஆயிரம் கோழிகளிலிருந்து சராசரியாக 650 முட்டைகளுக்குக் குறையாமல் முட்டை பெற முடிகிறது. ஒரு முட்டை ரூ.12 என்ற விலைக்கு மொத்தமாக ஏற்றுமதி செய்கிறேன்.

பண்ணை ஆரம்பிக்கும் போது 100 கோழிகளுக்குக் கூண்டு அமைக்க ரூ.22,000 செலவு ஏற்பட்டது. அதுபோக ஒரு நாளுக்குக் கோழி ஒன்றுக்கு உணவு மற்றும் மருந்து என ரூ.3 அளவுக்கு செலவு ஏற்படும். வரவு மற்றும் செலவுகள் போக 1,000 கோழிகளிலிருந்து பெறப்படும் முட்டையின் மூலம் குறைந்தபட்சம் மாதம் ரூ.1.30 லட்சம் மட்டும் நிகர லாபம் கிடைக்கிறது" என்றார்.

 கோழிப் பண்ணை

இயற்கை விவசாயி அருண் பண்ணையில் நாட்டுக்கோழி முட்டைகளை பல இடங்களிலிருந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் பல்வேறு மூத்த விவசாயிகளும் கரிம விவசாய மன்றங்களும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.