நாகர்கோவில் : சொகுசு காரில்ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் 5 பேர் கைது !

09 October 2021

நாகர்கோவில் :  சொகுசு காரில்ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்  5 பேர் கைது !


நாகர்கோவில் அருகே சொகுசு காரில்ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் தடை செய்யப்பட்ட விலை மதிப்பில்லாத பொருட்கள் கடத்தப்படுவதாக இரணியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திரா காலனி பகுதியில் உள்ள செல்லையா மகன் தனபாலன் என்பவருடைய வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவருடைய வீட்டருகே நின்ற சொகுசு காரிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த காரில் இருந்த ஒரு பையில் ஆம்பர்கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

உடனே காரில் இருந்த தென்காசி மாவட்டம் பண்பொழி சிவராம்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 45) என்பவரை பிடித்து விசாரித்தனர்.


மேலும் சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் பேரில் திமிங்கல உமிழ்நீர் கட்டியை விற்க வந்ததாக அந்த பகுதியில் பதுங்கியிருந்த செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோழிக்கோடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த வரதராஜன் (40), ராமநாதபுரம் பட்டினம் மரைக்காயர் தெருவை சேர்ந்த முகம்மது சுல்தான் (52), திருவட்டார் ஆதிகேசவன் தெருவை சேர்ந்த சில்வெஸ்டர் (47), புத்தன்கடையை சேர்ந்த வெர்ஜில் (43) ஆகியோரை மடக்கினர். இந்த விவகாரத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.


இதுகுறித்து போலீசார் வேளிமலை சரக வனச்சரக அலுவலர் சிவக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பிடிபட்ட 5 பேரும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீர் கட்டிகளின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.