முதலிடத்திற்கு முன்னேறிய மும்பை அணி

17 October 2020

அபுதாபி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. தினேஷ் கார்த்திக் பதவி விலகியதை அடுத்து அந்த அணியின் கேப்டனாக இயான் மோர்கன் பொறுப்பேற்று வழிநடத்தினார். கேகேஆர் அணியில் பான்டன், நாகர்கோட்டிக்கு பதிலாக கிறிஸ் கிரீன், ஷிவம் மாவி இடம் பெற்றனர்.
மும்பை அணியில் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு பதிலாக கோல்டர் நைல் சேர்க்கப்பட்டார். கொல்கத்தா தொடக்க வீரர்களாக திரிபாதி, கில் களமிறங்கினர்.
திரிபாதி 7 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் சூர்யகுமார் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த ராணா 5 ரன் எடுத்து கோல்டர் நைல் வேகத்தில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்த கில் 21 ரன் (23 பந்து, 2 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்ப, இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிய தினேஷ் கார்த்திக் 8 பந்தில் 4 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸ்ஸல் 9 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 12 ரன் எடுத்து விடைபெற்றார். கொல்கத்தா அணி 10.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 61 ரன் மட்டுமே எடுத்து திணறியது. இந்த நிலையில், கேப்டன் மோர்கன் - பேட் கம்மின்ஸ் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். போல்ட் வீசிய 19வது ஓவரில் 14 ரன் எடுத்த இவர்கள், கோல்டர் நைல் வீசிய கடைசி ஓவரில் 21 ரன் விளாச, கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன் குவித்தது.

மோர்கன் 39 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கம்மின்ஸ் 53 ரன்னுடன் (36 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 56 பந்தில் 87 ரன் எடுத்ததாலேயே கொல்கத்தா அணியால் ஒரு கவுரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் கடைசி கட்டத்தில் சற்று பதற்றமுடன் பீல்டிங் செய்து கேட்ச் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை வீணடித்ததும் கேகேஆர் ஸ்கோர் உயரக் காரணமாக அமைந்தது. மும்பை பந்துவீச்சில் சாஹர் 2, பூம்ரா, கோல்டர் நைல், போல்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

இதில் ரோகித் சர்மா 35 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தார். டி காக் அதிரடியாக விளையாடி 78 ரன் (44 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 10 ரன் (10 பந்து, 1 பவுண்டரி), ஹர்திக் பாண்டியா 21 ரன் (11 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தனர். இந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.