பல்லாவரம் பகுதியில் அனுமதியின்றி போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

01 December 2020

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் கூட்டுப் பொதுக்குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இக்கூட்டத்தில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி, டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை சென்னையில் நடைபெறுவதாக இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சென்னைக்கு வாகனங்களில் படையெடுத்து வந்த பாமக மற்றும் வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்கள், சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மற்றும் பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் மறியல் போராட்டம் மற்றும் இரயில் மீது கல்வீச்சு போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டனர்.

இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், சென்னையின் உள்ளே போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து நான்கு வேன்களில் வந்த பாமகவினர் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அதேபோல் பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாமக முக்கிய நிர்வாகிகள் பலரையும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


பல்லாவரம் தொகுதி செய்தியாளர் இராஜ்கமல்