இந்திய அளவில் முதல்வருக்கே முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” என்று  புகழாரம்

12 September 2021

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், "இந்திய அளவில் முதல்வருக்கே முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” என்று  புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், புதுக்கோட்டை அருகே கோவில்பட்டியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் நீதி மையம் கட்சியின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட மூர்த்தி, அதிமுக சார்பில் புதுக்கோட்டை எம்பி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர்.

இந்த விழாவில், புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுக கரை பதிக்கப்பட்ட வேட்டிகளை வழங்கி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் உதயநிதி. தொடர்ந்து பேசிய அவர் "ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான பணிகள் ஆயத்தமாகி விட்டது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூட தற்போது எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஆட்சியை பாராட்டி வருகின்றனர். அந்தளவுக்கு திமுக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றியுள்ளது.

எதுவும்‌ நிரந்தரம் இல்லைதான். ஆனால் இதேபோல் தமிழக முதலமைச்சர் ஆட்சி நடத்தினால் அடுத்த தேர்தலில் திமுக ஒட்டுகேட்கவே தேவையில்லை... மக்களே திமுக-வை வெற்றி பெறசெய்வார்கள். கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தற்கு முக்கிய காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். வெற்றி பெற்றது மட்டுமன்றி, இந்த 3 மாத ஆட்சியின் செயல்பாட்டின்மூலம், இந்திய அளவில் முதல்வருக்கே முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரின் குளறுபடியால், திமுக வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார், அது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்ப்பார்க்கிறோம்” என்றார்.