அ.தி.மு.கவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சி. திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு.

19 June 2021


திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்ட செயலாளரும், முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  திருவாரூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தது, அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த  முயற்சிக்கும் சசிகலாவிற்கு கண்டனம் தெரிவித்தது, குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், கர்நாடகாவில் உரிய காவிரி நீரை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும் , கொரோனாவில் இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ் முறையாக வழங்கப்பட வேண்டும் போன்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ்,நான்கு வருடங்களாக சிறையில் இருந்த  சசிகலா வெளியில் வந்தவுடன் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்து விட்டு,இப்போது ஒரு சில நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோவை பலரும் கேட்கும் படி வெளியிடுவது அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி, அம்மா கூறியதுபோல் அவருக்குப் பின் 100 ஆண்டுகள் இந்த கட்சி நீடித்து நிலைத்து நிற்கும், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், மன்னார்குடி சட்டமன்ற வேட்பாளர் சிவா ராஜமாணிக்கம்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்டக் கழக இணைச் செயலாளர் பாப்பாத்தி மணி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கி.இரவி,
திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.