2 ஆண்டுகளுக்குப் பின் மதுரை சித்திரை திருவிழா

10 March 2022

மதுரை சித்திரை திருவிழாவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழாவில் ஏப்ரல் 16 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொடியேற்றம், திருக்கல்யாணம், திக்விஜயம் உள்ளிட்ட விழாக்கள் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்றது. மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு, கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது.


கொரோனா தொற்று குறைந்திருப்பதால் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழாவில் ஏப்ரல் 12 ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், ஏப்ரல் 13 ஆம் தேதி திக்விஜயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஏப்ரல் 14 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 15 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும், அன்று மாலை கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.