இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு- தகவல்!

13 April 2021

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. செவ்வாய்கிழமை நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 1,61,736 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். வைரஸ் பாதிப்படைந்த 879 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
 
 ஹரியானாவில் திங்கள்கிழமை முதல் ஹரியானாவில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அம்மாநில உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ``சில நாள்கள் கழித்து நிலைமையை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். திங்கள்கிழமையன்று ஹரியானாவில் 3,818 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.