ஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது

05 April 2021

மின்னணு உபயோக பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜி, ஸ்மார்ட் போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.  கடந்த 2 வாரங்களாக எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனை மற்றும் தயாரிப்பை நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  

கம்பெனியின் போர்டு ஆஃப் டைரக்டர்ஸ்  திங்கள் கிழமை இதற்கான ஒப்புதலை அளித்ததாக எல்.ஜி நிறுவன அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2015- ஆம் ஆண்டு முதலே ஸ்மார்ட் போன் டிவிசனில் கடும் இழப்பை எல்.ஜி நிறுவனம் சந்தித்து வந்தது. கடந்த ஆண்டு 751 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு ஸ்மார்ட் போன் பிரிவில் எல்.ஜி நிறுவனம் இழப்பை சந்தித்தது. 

முன்னதாக கூகுள், பேஸ்புக், வோல்க்ஸ்வோகன் மற்றும் வியட்நாமின் பின் குழுமம் ஆகிய நிறுவனங்கள் எல்.ஜியின் ஸ்மார்ட் போன் பிரிவை வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. எனினும் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து முழுவதுமாக வெளியேற வேண்டிய நிலைக்கு எல்.ஜி தள்ளப்பட்டுள்ளது.  

தற்போது உற்பத்தி செய்யப்பட்டு உள்ள அனைத்து ஸ்மார்ட் போன்களும் முழுவதுமாக விற்பனைக்கு கிடைக்கும் எனவும் சர்வீஸ் மற்றும் மென்பொருள் அப்டேட்  ஆகியவையும் பிராந்தியத்தை பொருத்து குறிப்பிட்ட காலம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜுலை 31 ஆம் தேதி எல்.ஜியின் ஸ்மார்ட் போன்  வணிகம் முற்றிலும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.