கொற்றவை நியூஸ் செய்தி எதிரொலி:சாலை பள்ளம் சீரமைப்பு !

18 November 2021

கொற்றவை நியூஸ் செய்தி எதிரொலி:சாலை பள்ளம் சீரமைப்பு !


திருவாரூர் அருகே கொற்றவை நியூஸ்  செய்தி எதிரொலியால் சாலையில் ஏற்பட்ட ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்பட்டது.

   திருவாரூர் மாவட்டம்  வெள்ளையாற்றின் கரையோரத்தில் கீழபனங்காட்டாங்குடியிலிருந்து வடகட்டளைகோம்பூர் செல்லும் சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே இருந்து வந்தது.

   இந்தச்  சாலை திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளதால், இச்சாலை  தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

   இதனையடுத்து கடந்த ஆண்டு இந்த மண் சாலை  தார்ச்சாலையாக மாற்றப்பட்டு கீழபனங்காட்டாங்குடி, கானூர், பழையனூர், ஓகைப்பேரையூர், வடகட்டளைகோம்பூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். 

   இந்த  நிலையில் கடந்த சில நாட்களாக  அப்பகுதியில் பெய்த தொடர் மழையால், வடகட்டளைகோம்பூர் சாலையின் இடையே, வெள்ளையாற்றின் கரையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டதன்  காரணமாக சாலையில்  பெரிய பள்ளம் ஏற்பட்டது.  ஆபத்தான இந்த பள்ளத்தால்  இச்சாலையில்  செல்லும்  வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வந்தனர். 

   எதிர் எதிரே வரும் வாகனங்கள் வரும்போது கடும் சிரமத்துடன் வாகனங்களை இயக்க வேண்டி இருப்பதாகவும், இரவு நேரங்களில் இந்த இடத்தில் வித்து ஏற்படும் நிலை உள்ளதாகவும் அப்பகுதி கிராம மக்களும்,  வாகன ஓட்டிகளும் கவலை தெரிவித்தனர். 

   . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என அப் பகுதியை சேர்ந்த கிராம மக்களும், வாகன ஓட்டிகளும்  கோரிக்கை விடுத்தனர். 

   இது குறித்து கடந்த  8-ஆம் தேதி கொற்றவை நியூஸில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக  அதிகாரிகள் உடனடியாக சாலையில் மண் சரிந்து ஏற்பட்ட ஆபத்தான பள்ளத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட கொற்றவை நியூஸ் நிறுவனத்திற்கும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

*நிருபர் மீனா திருவாரூர்*