மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் கபில் தேவ்

25 October 2020

மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி அளித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஹரியானா சூறாவளி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 61 வயதான கபில்தேவ் டெல்லியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்டு இருக்கும் அடைப்பை நீக்க ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் உடல் நிலை சீராக உள்ளதையடுத்து கபில்தேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கபில் தேவ் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் அதுல் மாத்தூருடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்முறையாக உலக கோப்பையை 1983-ம் ஆண்டு வென்றுத் தந்த மகத்தான கேப்டன் கபில்தேவ்., இந்திய கிரிக்கெட்டையே இது தலைகீழாக மாற்றி போட்டது. சோம்பேறித்தனத்துக்கு விடைகொடுத்து சுறுசுறுப்புக்கும் வேகத்துக்கும் வித்திட்ட மாற்றமாகும் இது. வெள்ளைக்கார கிரிக்கெட்டை துணைக்கண்டம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் கபில்தேவ். அந்தத் தொடரிலேயே கபில்தேவ் என்பதை ‘கபில்ச் டெவில்ஸ்’ என்று அனைவரும் செல்லமாக அழைக்கத்தொடங்கி விட்டனர்.