மாணவர்களுக்கு கபடி பயிற்சி முகாம்

30 October 2020

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியம் கிராமத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள இரும்புலிக்குறிச்சி, பரணம், பிலாக்குறிச்சி கிராம இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கபடி பயிற்சி முகாமை உடற்பயிற்சி ஆசிரியர் திருஞான சம்பந்தம் நடத்தி வந்தார்.

இந்த முகாமில் 7 வயது சிறுவர்கள் முதல் 30 வயது இளைஞர்கள் வரை 85 பேர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்கு உடற்பயிற்சி மற்றும் கபடி பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாம் இறுதி நாளில் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சீருடைகளை ஊராட்சி தலைவர் ஆனந்தி பழனிவேல் தலைமையில் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாவட்ட கபடி குழு செயலாளர் வைத்தி, மாவட்ட கவுன்சிலர் செல்லரவி ஆகியோர் பேசும்போது, மது பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு விளையாட்டை கண்டிப்பாக கற்று கொள்ள வேண்டும்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் தான் கபடி விளையாட முடியும். விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் பங்கு பெற்றால் தான் மது, சிகரெட் போன்ற தீய பழக்கத்தில் இருந்து உடலை பேணிகாக்க முடியும் என்றனர்.!

செய்தியாளர்: கார்த்தி