நீதித்துறை கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது'

05 September 2021

நீதித்துறை கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது' லட்சக்கணக்கான மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண முடியவில்லை என்று தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு குறைபாடு, நிர்வாக ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் நீதிபதிகளின் பெரும் காலியிடங்கள் போன்ற கடினமான சவால்களை நீதித்துறை எதிர்கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பார் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு எத்தனை நீதிமன்றக் கட்டடங்கள், அறைகள் மற்றும் வசதிகள் உள்ளன என்பது பற்றிய விரிவான தகவல்களை நாட்டின் மூலை முடுக்கிலிருந்து சேகரித்து தான் ஒரு அறிக்கையாக தயார் செய்து வைத்திருப்பதாக கூறினார். அதனை ஒரு வாரத்திற்குப் பின்னர் மத்திய சட்ட அமைச்சரிடம் வழங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த நாட்களில், பெண்களுக்கு கழிப்பறை இல்லை என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன் என்றும் என்.வி.ரமணா வேதனையுடன் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு கழகம் தேவை என்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் தலைமை நீதிபதி கூறினார்.

கார்ப்பரேட் கட்டணத்தில் தரமான சட்ட ஆலோசனையை சாதாரண மக்கள் பெற முடியாதது கவலைக்குரிய விசயமாகும் என்று அவர் வேதனை தெரிவித்தார். நீதிக்கான அணுகலை தாங்கள் வலுவாக வழங்கினாலும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண முடியவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

பெரும்பாலான பெண் வழக்கறிஞர்கள் தொழிலில் போராடுவதாகவும், மிகச்சில பெண்கள் மட்டுமே முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் பேசினார். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து மட்டங்களிலும் குறைந்தபட்சம் 50 விழுக்காடு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்க வேண்டும், ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வில் 11 சதவிகித பெண்களே சாதிக்க முடிந்துள்ளதாவும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.