தரையில் இருந்து சுமார் 3.50 லட்சம் அடி உயரத்திற்கு பறந்து வெற்றிகரமாக திரும்பியது ஜெஃப் பெசாஸ் குழு!

20 July 2021


தரையில் இருந்து சுமார் 3.50 லட்சம் அடி உயரத்திற்கு பறந்து வெற்றிகரமாக திரும்பியது ஜெஃப் பெசாஸ் குழு


சர்வதேச அளவில் விண்வெளி சுற்றுலாவுக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. இந்த போட்டியில் அமெரிக்காவின் விர்ஜின் கேலடிக், உலக பணக்காரர்களில் ஒருவரான ஜெப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின், எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியின் ஒரு பகுதியாக கடந்த 11ம் தேதி விர்ஜின் கேலடிக் நிறுவனம் யூனிட்டி 22 என்கிற விண்கலத்தில் 6 பேரை விண்வெளிக்கு அனுப்பி பத்திரமாக பூமியில் தரையிறக்கியது.

இதனைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஜெப் பெசோஸ் தனது ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் தன்னுடன் மூன்று பேருடன் பூமியிலிருந்து 100 கி.மீ தொலைவுக்கு சென்று திரும்பியுள்ளார். இந்த பயணத்தில் 82 வயதான முன்னாள் பெண் விமானி வாலி பங்க் மற்றும் 18 வயது இளைஞர் மற்றும் ஜெப் பெசோஸின் சகோதரரும் பங்கேற்றுள்ளனர். இவர்களை நியூ ஷெப்பர்ட் என்கிற விண்கலம் விண்வெளிக்கு கொண்டு சென்று பத்திரமாக தரையிறக்கியுள்ளது.

முன்னதாக விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் விண்கலம் 90 கிமீ தொலைவுக்கு சென்று திரும்பியது. ஆனால், சர்வதேச அளவில் அங்கிகரீக்கப்பட்ட விண்வெளி எல்லை என்பது 100கி.மீ ஆகும். இந்த தொலைவில் கார்மன் கோடு உள்ளது. இது புவியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடு என்பது குறிப்பிடத்தக்கது.