ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ஜோ பைடன்! என்ன காரணம்?

16 April 2021

அமெரிக்காவில் அரசின் முக்கிய துறைகளான உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வர்த்தகம் உள்பட 9 அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் கணினிகளில், ரஷ்ய ஹேக்கர்கள் கடந்தாண்டு ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது மட்டுமின்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, ரஷ்யா மறைமுகமாக உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. தமது நாட்டில் செயல்பட்டு வரும் ரஷ்ய தூதரகத்தின் 10 அதிகாரிகளை, நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. மேலும், ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் 30 தனிநபர்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் மீதும் பொருளாதார தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தங்கள் ஜனநாயகத்தில் ரஷ்யா தொடர்ந்து தலையிட்டால், மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, விரைவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.