நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கு 'ஜெயிலர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் ரத்தம் தோய்ந்த மெகா சைஸ் அரிவாள் ஒன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு நெல்சனும், 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு ரஜினியும் இணையும் இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஒரு ஆக்ஷன் - த்ரில்லர் என்று கூறப்படுகிறது. ஜெயிலை உடைத்து வெளியேற கும்பல் ஒன்று திட்டம் தீட்டுகிறது. இதில் அனுபவம் வாய்ந்த ஜெயிலராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அந்தக் கும்பலின் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் என கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், பிரியங்கா மோகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.