ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணியை ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா அணி.

24 October 2020

அபுதாபியில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கொல்கத்தா அணி, கில், திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் விக்கெட்டுக்களை ஆரம்பத்திலேயே இழந்து தடுமாறியது. அப்போது, ராணாவுடன் ஜோடி சேர்ந்த சுனில் நரேன் இணை அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அரைசதம் விளாசிய சுனில் நரேன் 64 ரன்கள் ஆட்டமிழந்தார்.

ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ராணா 81 ரன்களை குவித்து, கொல்கத்தா அணி இமாலய ரன் குவிப்பதற்கு வித்திட்டார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 194 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து, இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியின் ரகானே போட்டியின் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து, கடந்த இரு போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் விளாசிய தவானும் ஏமாற்றம் அளித்தார். பின்னர், ஜோடி சேர்ந்த பண்ட் – கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அணியை மேல்நோக்கி இழுத்துச் சென்றனர்.

இருவரும் நிதனமாக ஆடி வந்த நிலையில், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் சுழலுக்கு பண்ட் (27), ஸ்ரேயஸ் ஐயர் (47), ஹெட்மயர் (10), ஸ்டொய்னிஸ் (6) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.