27 ஆண்டு சேவைக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நாளை ஓய்வு

15 June 2022

ரெட்மான்ட் (வாஷிங்டன்): மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதள தேடுபொறியான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவை ஜூன் 15-முதல் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏறக்குறைய 27 ஆண்டுக்கால பயன்பாட்டுக்குப் பிறகு இந்த தேடுபொறியின் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேடுபொறியின் சேவையை சார்ந்துள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நிறுவனங்கள் வேறு தேடுபொறிக்கு மாறிவிடுமாறு மைக்ரோசாப்ட் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இணையதள தேடுபொறி செயலியானது 1995-ம் ஆண்டு விண்டோஸ் 95 இயங்குதளத்துடன் (ஓஎஸ்) வெளியிடப்பட்டது. பின்னர் இது இலவசமாக வழங்கப் பட்டது.

2003-ம் ஆண்டில் இதன் உபயோகிப்பாளர் விகிதம் உச்சபட்ச அளவான 95 சதவீத அளவைத் தொட்டது. ஆனால் அதன்பிறகு உபயோகிப்பாளர் அளவு படிப்படியாக சரியத் தொடங்கியது.

இது தவிர, இன்டர்நெட் தேடுபொறி சார்ந்து பல நிறுவனங்கள் இதைவிட சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டதாகவும் விரைவான இணையதள வேகத்தைக்கொண்டதாகவும் செயலிகளை அறிமுகம் செய்தன.

இதையடுத்து விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரை முழுவதுமாக நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக விண்டோஸ் எட்ஜ் செயலியை பயன்படுத்துமாறு மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியது.

மைக்ரோசாப்ட் எட்ஜ் செயலி பயன்பாட்டைப் பொறுத்தே விண்டோஸ் 10 இயங்குதளத்தின் எதிர்காலம் இருக்கும் என்று மைக்ரோசாப்ட் எட்ஜ் திட்ட மேலாளர் சீன் லின்டர்ஸே தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் எட்ஜ் செயலியானது மிக விரைவாக செயல்படுவதோடு, பாதுகாப்பானதாகவும், ஏனைய தேடுபொறி அனுபவங்களை விட சிறப்பானதாகவும் இருந்தது. இதிலும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. இதைத் தொடர்ந்து தேடுபொறி மேம்பாட்டு நடவடிக்கையை 2016ல் மைக்ரோசாப்ட் நிறுத்தியது. இந்நிலையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயல்பாட்டை முழுவதுமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.