வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரம்

01 September 2021

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் மழையால் வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பெரும் சிரமங்களை சந்தித்துவருகின்றன. 

ஹரியானா, டெல்லி, உ.பி., ம.பிக்கு கனமழை எச்சரிக்கை. அசாம் மாநிலத்தில் கனமழையால் சுமார் ஆயிரம் கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்ரா வெள்ளம், அசாம் மாநிலத்தின் 21 மாவட்டங்களை வெள்ளக்காடாக்கியுள்ளது. சுமார் 4 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் பத்துக்கும் அதிகவிலங்குகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தநிலையில், சரணாலயத்தின் 70 சதவிகித நிலம், மழையால் மூழ்கியுள்ளது.

அசாம் மட்டுமல்லாமல் அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் மிக அதிகமான கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நேபாள நாட்டில் பெய்துவரும் கனமழையால், பீகாரிலும் கடும் விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக பீகாரின் கண்டக், கோஷி, பாகமதி, கம்லா ஆகிய நதிகளில் அபாய அளவை கடந்து வெள்ளம் கரைபுரள்கிறது.

தலைநகர் டெல்லியிலும் காலை முதல் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. நகரின் முக்கிய இடங்களான லோதி ரோடு, அஸவ் அலி சாலை, ஐ டி ஓ எய்ம்ஸ் மேம்பாலம், துவாரகா உள்ளிட்டவற்றில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிக அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக டேராடூன், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது