திருவாரூரில் தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

23 September 2021


திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் இறந்ததையடுத்து தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூரை அடுத்த பொற்கலாகுடி கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தவமணி (வயது 55). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமண விழாவில் பாத்திரம் கழுவும் வேலைக்கு சென்றபோது மாடிப்படியிலிருந்து  தவறி கீழே விழுந்துள்ளார்.

 இதில் அவருடைய இடுப்பு எலும்பில் பலமான காயம் ஏற்பட்டதையடுத்து கடந்த 13-ந் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தவமணி சேர்த்தனர்.  அவரை பரிசோதித்த டாக்டர்கள் இடுப்பு எலும்பின் ஜவ்வு சேதமாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில்  தவமணிக்கு அறுவை சிகிச்சைக்காக டாக்டர்கள் அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து  சிறிது நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தவமணி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்தவமணியின் உறவினர்கள்  தவறான சிகிச்சையால் தவமணி உயிரிழந்து விட்டதாக கூறி  மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதுகுறித்த தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர்  பரமானந்தம் தலைமையில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தவமணி உடலை பிரேத பரிசோதனை செய்து உண்மை நிலை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். 

 அதன்பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து தவமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

*நிருபர் மீனா திருவாரூர்*