முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்

07 May 2022

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உடன் மேடையில் நிற்கிறார்.


I M.K. Stalin என்று அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகி பதவிப்பிரமானம் செய்ய. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று சொல்லி விட்டு 3 நொடிகள் மக்களைப் பார்க்கிறார் ஸ்டாலின். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஸ்டாலின் மனைவி துர்கா, தன் வலது கையை கண்களில் வைத்து கண்களை இருக மூடி, கண்ணீரைத் துடைத்து மேடையில் நிற்கும் ஸ்டாலினை பார்க்கிறார். அந்த நொடி, ஸ்டாலினுக்கும் - துர்கா ஸ்டாலினுக்கும் ஆயிரம் ஆயிரம் கடந்த கால நினைவுகளை ஏற்படுத்தி இருக்கும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஒரு தளபதியாக மட்டுமே இருந்து கருணாநிதியின் சாம்ராஜ்ஜியத்திற்காக உழைத்த ஒருவர், மன்னராக மாறிய பெருமிதமான தருணமாக திமுக தொண்டர்களுக்கு கூட அது இருந்திருக்கலாம்.




ஸ்டாலின் தனது அரசியல் வாழ்வில் அனுபவித்த அத்தனை சோதனைகளையும் விட நெருப்பாற்றில் நீந்த தனது உடைகளை துறந்த தருணம் போல் தான் தமிழ்நாடு அன்று இருந்தது. 2011ல் ஆட்சியை இழந்த திமுக அந்த ஆண்டு எதிர்க்கட்சியாக கூட இல்லை. 2016ல் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நெருக்கடியுடன் அரசியலில் காய்களை நகர்த்திக்கொண்டிருந்த ஸ்டாலின், 10 ஆண்டுகளுக்கு பிறகு 69 வயதில், முதல் முறையாக முதலமைச்சராக அரியணை ஏறினார்.


கொரோனா, குழு, இன்னும் இன்னும்:


கொரோனா என்கிற பெருந்தொற்றின் இரண்டாவது அலை உலகையே உயிர்வேட்டை ஆடிக்கொண்டிருந்த நேரத்தில், ஸ்டாலின் ஒரு நீண்ட தேர்தல் வாக்குறுதி பட்டியலுடன் தான் தலைமைச்செயலகத்தினுள் நுழைந்தார். கஜானாவில் காசு இல்லை. கொரோனாவால் சரிந்த தமிழ்நாடு பொருளாதாரத்தை மீண்டும் கட்டி அமைக்க வேண்டும். மக்களின் அவநம்பிக்கையை ஆட்சிக்கு வந்த உடனேயே பெற்றுவிடக் கூடாது என்ற ஆயிரம் ஆயிரம் வினாக்களுடன் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார் ஸ்டாலின். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்ற முதல் கையெழுத்தை இட்டார். கொரோனா 2-வது அலையில் ஸ்டாலின் அரசு செய்த செயல் பூர்வமான கள உழைப்பு தொடங்கி, கோவையில் கொரோனா வார்டிற்குள் சென்ற முதல் முதலமைச்சர் என்ற பெருமை வரை அவர் உழைப்புக்கு மக்கள் பாராட்டையும் பெருமிதத்தையும் கொடுத்தார்கள். அந்த ஆண்டே சென்னை சந்தித்த கடும் மழை பாதிப்பில் களத்திற்கே சென்று மழையோடு மல்லுக்கட்டியது ஸ்டாலினை மக்கள் மனத்தில் குடியமர்த்தியது.




முதல் பணியாக தன் ஆட்சியை வழி நடத்த உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை ஸ்டாலின் உருவாக்கிய போது, அந்த பட்டியலைப் பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பொழிந்தது. நீட் பாதிப்பை ஆராய ஏ.கே.ராஜன் குழு, நோபல் பரிசுபெற்ற அறிஞர் எஸ்தர் டஃப்ளோ உள்ளிட்ட 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு, சென்னையில் வெள்ளத்தைத் தணிக்க திருப்புகழ் தலைமையில் குழு. இலங்கைத் தமிழர்கள் நலன், சமூக நீதியை நிலை நாட்ட குழு, புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குதல், MSMEகளை புதுப்பிக்க, ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் குழுக்கள் என ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் 30க்கும் மேற்பட்ட குழுக்களை உருவாக்கினார்.




இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கத்தில் திமுக கூட்டணி கட்சிகளாலேயே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பின்னர் ஸ்டாலின் விளக்கத்தால் கூட்டணி கட்சியினர் அமைதியானார்கள். எட்டு மாதங்களில் 80 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு உதவியதாக சொல்லப்படும் மக்களை தேடி மருத்துவம், வீடு சார்ந்த சுகாதார சேவைகள் உள்ளிட்டவையும் ஸ்டாலின் அரசின் சாதனை பட்டியல்களே. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் " நம்மை காக்கும் 48" போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


ஆளுநர் அழுத்தமும் பாஜக நெருக்கடியும்:


நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதில் தொடங்கி, பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்களின் 2 நாள் கருத்தரங்கை ஊட்டியில் கூட்டியது வரை ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொடுத்த அழுத்தங்கள் ஏராளம். ஆனால், அதில், எந்த இடத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் பின் வாங்கவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஸ்டாலின் அரசை பாராட்டி ஆளுநர் ஆர்.என். ரவி காலையில் பேச, மாலையில் டெல்லியில் அனல் பறக்க, ஆளுநரை திரும்பப் பெறுங்கள் என டி.ஆர்.பாலு அரசியல் வெப்பத்தை உமிழ்ந்தது தமிழ்நாடு பார்த்த புதிய அரசியல் அதிரடியாக இருந்தது.


கட்டாய மத மாற்றம், இந்துக் கோவில்களுக்கு அச்சுறுத்தல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என்ற ஆயுதங்களை பாஜக கையில் எடுக்க, கூட்டாட்சி, சமூக நீதி, தமிழ்/திராவிட பெருமை ஆகியவற்றை ஸ்டாலின் கையில் எடுத்து களமாடுகிறார். ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஸ்டாலின் உருவாக்கிய திராவிட மாடல் அரசியல் அவரை தமிழ்நாட்டில் அசைக்க முடியாத தலைவராகவும், தேசிய அரசியலில் ஆளுமை செலுத்தும் கிங் மேக்கராகவும் உருவாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் பாஜகவால் நுழையவே முடியாது என்று ராகுல் காந்தியும் பிரதமர் மோடியும் வார்த்தைப் போர் நிகழ்த்தும் அளவுக்கு திராவிட மாடல் ஃபார்மூலா பாஜகவுக்கு எதிராக செல்வாக்கு செலுத்துகிறது.


ஸ்டாலின் அரசின் பாதகங்கள்:


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்த்தும் பனிப்போர் என்ன அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பது காலத்தின் கையில் தான் உள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே, பால், பெட்ரோல் விலை குறைப்பு, பயிர் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி, சுயஉதவிக்குழுக்களின் தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்துவது என பல விஷயங்களில் ஸ்டாலின் அரசு நற்சான்றிதழ் பெற்றாலும் கூட, அறிவிக்கப்படாத மின் தடை என்பது மக்களை வியர்க்க வைத்துக்கொண்டு இருக்கிறது. இது, மக்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. அதே போல், தொடர் மின்வெட்டு மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய மின்சாரத்துறையில் நிலக்கரி மீதான சர்ச்சை திமுக அரசின் கண்களில் விழுந்த தூசு போலவே உறுத்திக்கொண்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.


மைக்கேல்பட்டி மாணவி மத மாற்றத்தால் உயிரிழந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முதல், பட்டனப் பிரவேசம் வரை ஸ்டாலின் அரசு மீது மதத்தின் பெயரால் ஒரு அரசியல் கட்டமைக்கப்பட்டு பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது. இருப்பினும், அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக நியமனம், ஒருகால பூஜை நடத்த நிதி ஆதாரம் இல்லாத கோவில்களுக்கு ரூ.170 கோடி மானியம் வழங்கியது போன்றவற்றால் திமுக இந்துக்களுக்கு எதிரானது என்பதை பொய்யாக்க ஸ்டாலின் கூடுதல் முயற்சி எடுத்தார். இருப்பினும், இந்து சமூகத்திற்கு எதிரான கட்சி திமுக என்ற பிரச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதன் மீது எதிர்காலங்களில் அரசியல் கட்சிகள் கடும் தாக்குதல் நடத்தினால், அதை முதலமைச்சர் ஸ்டாலின் எப்படி எதிர்கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே போல், திமுக ஆட்சியிலும் தொடரும் லாக்கப் மரணங்கள் திமுக ஆட்சிக்கு ஒரு கறுப்பு புள்ளியாக இருக்கிறது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.