ஐபிஎல் 2020: 69 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வீரர்களை தோற்கடித்து ஹைதராபாத் அணி அபார வெற்றி...

09 October 2020

‌ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. பேர்ஸ்டோ அதிரடி, ரஷித் கான் சுழல் என பஞ்சாப் அணி வீரர்களை ஹைதராபாத் அணி திணறடித்தது.

ஐபிஎல் தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இணை களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்தது. 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என 52 ரன்கள் எடுத்து கேப்டன் டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார்.


மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்டோ எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 7 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் விளாசி 97 ரன்கள் குவித்த பேர்ஸ்டோ, மூன்று ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

இதன்பின் களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்திலேயே ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினர். அப்துல் சமத் 8 ரன்னிலும், மனிஷ் பாண்டே 1 ரன்னிலும் வெளியேற, வில்லியம்சன் 20 ரன்களும், அபிஷேக் சர்மா 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

202 என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி வீரர்கள் சேசிங்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கினர். வழக்கம்போல் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் தொடக்கத்தை கொடுத்தனர். ஒரு பவுண்டரி மட்டுமே விளாசி 9 ரன்கள் சேர்த்த நிலையில், ரன் அவுட்டாகி மயங்க் அகர்வால் அதிர்ச்சி அளித்தார்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல். ராகுல் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் . இதனால் பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே 58 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது

4 வது வீரராகக் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்து, லேசான நம்பிக்கை ஏற்படுத்தினார்.

ஒருபுறம் பூரன் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்க்க, மறுபுறம் மேக்ஸ்வெல், மந்தீப் சிங், முஜிப் உர் ரஹ்மான், ரவி பிஷ்னோய் என அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி 77 ரன்கள் குவித்து பூரன் வெளியேற, 16.5வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. மிடில் ஆர்டர் மற்றும் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்துவீசிய ஹைதராபாத் அணி வீரர் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் அதிக ரன்ரேட் பெற்று பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 97 ரன்கள் குவித்து அசத்திய பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.