இளம்பெண்ணுடன் நின்ற வாலிபர் மீது இந்து அமைப்பினர் கொலைவெறி தாக்குதல்

03 April 2021

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கங்கனாடி ஆம்னி பஸ் நிலையத்தில் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பெங்களூருவுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து நின்றுள்ளனர். 


அப்போது அங்கு வந்த இந்து அமைப்பினர் சிலர், காதல் ஜோடி என நினைத்து அவர்களுடன் தகராறு செய்துள்ளனர். மேலும் அந்த வாலிபரை பிடித்து அவர்கள் ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் வாலிபர் பலத்த காயமடைந்தார். 


இதையடுத்து வாலிபர் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதுதொடர்பாக கங்கனாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தட்சிணகன்னடா மாவட்டத்தில் மங்களூரு, பெல்தங்கடி, புத்தூர், சுள்ளியா உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் இளம்பெண்களுடன் வரும் வாலிபர்களை தாக்கி வருவதாகவும், இது கண்டித்தக்கது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


கங்கனாடி பகுதியில் பஸ்சுக்காக இளம்பெண்ணுடன் காத்திருந்த வாலிபரை ஒரு அமைப்பினர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக 8 பேரை சந்கேத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட வாலிபரும், இளம்பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் நண்பர்கள். 


இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு பெங்களூருவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை கிடைத்துள்ளது. இதனால் பெங்களூருவுக்கு செல்ல இளம்பெண், வாலிபரை அழைத்து செல்ல திட்டமிட்டார். 


அதன்படி வாலிபருடன் அவர் கங்கனாடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மங்களூரு பகுதியில் கடந்த 2 மாதங்களில் இதுபோன்ற 4 சம்பவங்கள் நடந்துள்ளன. 


 எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பூங்கா, மைதானங்கள், பஸ் நிலையங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.