ஹைதி நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு

16 August 2021


ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது. 


வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்று ஹைதி. இங்கு நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவானது. ஹைதி தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. மேலும், நேற்றைய நிலவரப்படி கட்டட இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 724 ஆக உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்திய தாகவும் தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறினார். கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதாலும், ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2800க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.