முல்லா கொடுத்த பரிசு

31 March 2021

வெளியூர் ஒன்றிற்கு சென்ற முல்லா, அங்குள்ள பொது குளியல் அறைக்குச் சென்றார். அழுக்கான ஆடை உடுத்திய முல்லாவைக் கண்ட பணியாளர்கள் சிலர் சீக்கிரமாக குளித்து விட்டு போகும்படி விரட்டினர். ஆனால் அவர்களுக்கு ஆளுக்கொரு தங்கக்காசு கொடுத்தார் முல்லா.மறுநாள் காலையில் மீண்டும் குளிக்கச் சென்றார். தங்களால் முடிந்தளவு பணியாளர்கள் உபசரித்தனர். பன்னீர், நறுமணப் பொடியைக் கொடுத்தனர். முல்லாவும் அதை பயன்படுத்திக் கொண்டார். பணியாளர்கள் பரிசுக்காக காத்திருந்தனர். வெளியே வந்த முல்லா ஆளுக்கொரு செப்பு காசு கொடுத்தார்.''சிரமப்பட்டு உபசரித்தோமே...இதற்கு இது தான் பரிசா?'' எனக் கேட்டனர்.''நேற்று செய்த பணிக்கு செப்புக் காசு, இன்று செய்த பணிக்கு தங்கக்காசு'' எனச் சிரித்தார். ''இனியாவது அனைவரையும் சமமாக கருதுங்கள். யார் மீதும் அலட்சியம் காட்டாதீர்கள்'' என்றார் முல்லா.