டாப்சிலிப் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

01 September 2022

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா ஆகியோரது உத்தரவின் பேரில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோழிகமுத்தி முகாமில் நடைபெற்றது. விழாவிற்கு வனச்சரகர் காசிலிங்கம் தலைமை தாங்கினார். இதையொட்டி யானைகளை பாகன்கள் ஆற்றில் குளிப்பாட்டினார்கள். பின்னர் அங்கு உள்ள விநாயகர் கோவிலுக்கு யானைகள் அழைத்து வரப்பட்டன. அதை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.பின்னர் விநாயகருக்கும், வளர்ப்பு யானைகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து யானைகள் தும்பிக்கையை தூக்கி விநாயகரை வணங்கின. அதை தொடர்ந்து யானைகளுக்கு சர்க்கரை பொங்கல், தேங்காய், பழம், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், பாகன்கள் மற்றும் மலைவாழ் மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி