சேதுபதி மன்னர் முதல் கருணாநிதி, ஜெயலலிதா வரை...கச்சத்தீவின் வரலாறு

20 May 2022

ராமேஸ்வரத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கச்சத்தீவு, முந்தைய காலங்களில் ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.


1822-ம் ஆண்டு இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவு கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.


1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் என்பவர் கச்சத்தீவின் புனித அந்தோனியார் ஆலயத்தை கட்டினார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறும் திருவிழாவில் இரு நாட்டு மீனவர்களும் கலந்துகொள்வர். இது மீனவர்களுக்கு இடையேயான நட்புறவுக்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.


1913 முதல் 1928 வரை கச்சத்தீவு சென்னை மாகாணத்தின் மீன்வளத்துறைக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதனிடையே, கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம் எனும் கருத்து 1920-ம் ஆண்டு முதல் அந்நாட்டு அரசால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. 1921-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் வகுக்கப்பட்ட மீன்பிடி எல்லையின்படி, கச்சத்தீவின் மேற்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இந்திய மீனவர்களும் மீன்பிடித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.




அடுத்தடுத்த ஆண்டுகளில் கச்சத்தீவு மீது உரிமை கொண்டாட இரு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. 1956-ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவின் கடல் எல்லைக்கோடு 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல் மைல்களாக விரிவுபடுத்தப்பட்டது.1971-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரை கச்சத்தீவில் இலங்கையின் முப்படைகள் முகாமிட்டன.


இதனிடையே, 1973-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இலங்கை சென்றபோது கச்சத்தீவு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், 1974-ம் ஆண்டு இலங்கை பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்கா இந்தியா வந்தார். இரு நாட்டு பிரதமர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.


1974-ம் ஆண்டு ஜுன் மாதம் 29-ம் தேதி முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, கச்சத்தீவை மீட்கக்கோரி தீர்மானம் கொண்டுவந்தார். பின்னர், 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி கையெழுத்தான மற்றொரு ஒப்பந்தத்தில், இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கக்கூடாது என்றும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.




கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவு குறித்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2013-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, கச்சத்தீவை மீட வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் 2013-ம் ஆண்டு மே10-ம் தேதி கச்சத்தீவை மீட்கக்கோரி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த இரு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தற்போது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், கச்சத் தீவு இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.