பாஜகவில் இணைந்தார் திமுக முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம்..!

21 November 2020

திமுக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திமுக முன்னாள் எம்பி. கே.பி. ராமலிங்கம் இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.

 கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கருணாநிதி போன்று திறமையாக கட்சியை வழிநடத்தவில்லை என்று பகிரங்கமாகவே ராமலிங்கம் குற்றஞ்சாட்டியதால், கடந்த ஏப்ரல் மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், முக அழகிரியின் ஆதரவாளரும், திமுகவின் முன்னாள் எம்பியுமான கே.பி. ராமலிங்கம்.  இதையடுத்து அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில், கே.பி.ராமலிங்கம் என்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இன்று தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், அவர் பாஜகவில் இணைவார் என தகவல்கள் வெளியான நிலையில், பாதுகாப்பு கருதி,   பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கேபி ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்.

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி, இணைபொறுப்பாளர் சுதாகர்ரெட்டி முன்னிலையில் இன்று கமலாலயத்தில்  பாஜகவில் இணைந்த  கே.பி. ராமலிங்கத்துக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்கப்பட்டது. அத்துடன் பாஜகவின்  அடிப்படை உறுப்பினர் அட்டையை பாஜக பொறுப்பாளர் சிடி ரவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, கே.பி.ராமலிங்கம் வருகையால் திமுக பலம் இழக்கிறது; பாஜக பலம் பெறுகிறது என்றார்.

ஏற்கனவே திமுக தலைமையுடனான பிரச்சினையில் காரணமாக ஆயிரம்விளக்கு தொகுமி  எம்எல்ஏ குகசெல்வம், முன்னாள துணைசபாநாயகர் வி.பி.துரைசாமி உள்பட  பலர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், தறபோது கே.பி.ராமலிங்கத்தின்  ஐக்கியமும்  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.