இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து, இம்ரான் கான் அரசு பைலட் அபிநந்தன் வர்தமனை விடுவித்தது - பாகிஸ்தான் எம்.பி

29 October 2020

இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து, இம்ரான் கான் அரசு இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன் வர்தமனை திடீரென விடுவித்ததாக பாகிஸ்தான் எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் (பி.எம்.எல்-என்) தலைவர் அயாஸ் சாதிக், அபிநந்தன் வர்தாமனை பாகிஸ்தான் விடுவிக்கவில்லை என்றால், இந்தியா பாகிஸ்தானை தாக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாக தெரிவித்தார்.

பிபிபி மற்றும் பிஎம்எல்-என் மற்றும் இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்ட நாடாளுமன்றத் தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய குரேஷி, அபினந்தனை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக சாதிக் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர் " பிரதமர் இம்ரான் கான் கலந்து கொள்ள மறுத்த கூட்டத்தில், ஷா மஹ்மூத் குரேஷி இருந்தார், இராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வா அறைக்குள் வந்தார். அவரது கால் நடுங்கிய நிலையில், அவருக்கு வியர்த்து கொட்டியது. அப்போது வெளியுறவு மந்திரி அபிநந்தனை செல்ல விடுங்கள், இந்தியா இரவு 9 மணிக்கு பாகிஸ்தானைத் தாக்கப் போகிறது " என்று சாதிக் அந்த முக்கியமான சந்திப்பின் நிகழ்வுகளை விவரித்தார்.




அபிநந்தன் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் எதிர்க்கட்சி பாகிஸ்தான் அரசை ஆதரித்துள்ளது, ஆனால் அதை மேலும் ஆதரிக்க முடியாது என்று சாதிக் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்திய மற்றும் பாகிஸ்தான் விமானப்படைக்கு இடையிலான நாய் சண்டையின்போது இந்திய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானமான எஃப் -16 ஐ விங் கமாண்டர் வர்தமன் சுட்டுக் வீழ்த்தினார். பின்னர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற அவரது விமானம் சுடப்பட்டது.

எனினும் பாராசூட் மூலம் அதிலிருந்து தப்பிய அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. பின்னர் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் 1 ம் தேதி அத்தாரி-வாகா எல்லையிலிருந்து அபிநந்தன் இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.