மத்திய அரசு நெல் கொள்முதலில் சி-2 வை சேர்த்து விலை நிர்ணயம் செய்து அறிவித்திட வேண்டும் : விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

10 June 2021


மத்திய அரசு நெல் கொள்முதலில் சி-2 வை சேர்த்து விலை உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வைளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் விளைபொருள்களின்விலை உயர்வு வழக்கம் போல வஞ்சகமே.. நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை கூடி வேளாண் விளை பொருட்களுக்கு வரும் காரீப்பருவத்திற்கான விலையை அறிவித்துள்ளது. நெல் முதல் ரகம் கடந்தாண்டு விலையான குவிண்டால் ரூபாய் 1888 உடன் ரூபாய் 72 சேர்த்து - ரூ 1960 எனவும்...,இரண்டாம் ரகம் கடந்தாண்டு 1868 ரூபாயுடன் 72 ரூபாய் சேர்த்து 1940 ரூபாயாகவும் அறிவித்துள்ளது. அதாவது நடப்பாண்டு 3.80 சதம் மட்டுமே வரும் ஆண்டுக்கான விலையாக உயர்த்தி அறிவித்துள்ளது.

       உரம் மற்றும் இடுபொருள் மருந்துகள் விலை உயர்வுக்கு ஏற்ப மட்டுமல்ல விதை , இடுபொருள், :டீசல் , நடவு, களையெடுப்பு, தொழிலாளர்கள் கூலி , உயர்வுக்கு ஏற்ப நெல் விலை உயர்வை அறிவிக்கவில்லை. ஆனால் 22 சதவீதம் அளவிற்கு உற்பத்திக்கான செலவு கூடி இருக்கிறது .2018 ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ. 200 நெல்விலையை உயர்த்தி விட்டு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலையை அறிவித்துள்ளதாக விவசாயிகளை ஏமாற்றியது. இப்போதும் 50 சதவீதம் உயர்வு என்கிறது . அறிவிக்கப்பட்டுள்ள விலையால் விவசாயிகள் 50 முதல் 85 சதவீதம் வரை லாபம் பெறுவார் என மத்திய அரசு கூறியிருப்பது என்பது மோசடியாகும்.

உற்பத்திக்கான செலவை மத்திய அரசு கணக்கிடுற போது சி.2 - வை சேர்ப்பதில்லை என்பது நியாயமானதாக இல்லை.. இந்த நிலையில் தான் சத்தீஸ்கர், கேரளா , தெலுங்கானா மாநில அரசுகள் நெல் குவிண்டால் ரூ. 2,500 வரை விலை வைத்து கொள்முதல் செய்து வருகின்றது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள தி.மு.க அரசும் ரூ .2, 500 வழங்கிட உள்ளது. ஆலைகளுக்கு தேவையான பருத்தி உற்பத்தி இந்தியாவில் இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள விலையை விட கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் உள்ளூரில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு நடப்பாண்டு விலை உயர்வாக நீண்ட இழை பருத்திக்கு ரூ 200 சேர்த்து குவிண்டால் ரூ 6,025- எனவும் , குறுகிய இழை பருத்திக்கு ரூ 211 சேர்த்து ரூ 5,726 எனவும் அறிவித்துள்ளது வேதனையானது.  

தற்போது தனியார் வியாபாரிகள் ரூ.5,500 க்கு கொள்முதல் செய்து வருகிறார்கள். இது போலத்தான் பிற வேளாண் பொருட்களுக்கும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தென்னை விவசாயிகள் புயல் பாதிப்பில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்தும், விளைச்சல் குறைந்தும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விளைந்ததையும் வாங்குவோர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. தேங்காய் மற்றும் கொப்பரை விலையை உயர்த்தி அரசே நேரிடையாக அனைத்து வட்டாரங்களிலும் கொள்முதல் செய்திட உடன் அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் சி-2 வை சேர்த்து மத்திய அரசு நெல் விலை உயர்வை உடன்அறிவிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

நிருபர் மீனா திருவாரூர்