உ.பி பாஜகவில் தொடர்ந்து விழும் விக்கெட்டுகள்!

13 January 2022

உத்தரப் பிரதேசத்தில், ஆளும்கட்சியான பாஜகவைச் சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவில் இருந்து 48 மணி நேரத்தில் பதவியில் இருந்து விலகியுள்ள 7-வது எம்எல்ஏ இவர் ஆவார்.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி பாஜக அரசில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். அடுத்த மாதம் 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், உபி பாஜக அரசு ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா நேற்றுமுன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தாரா சிங் சவுகான் என்ற அமைச்சர் நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில், பாஜக எம்எல்ஏ முகேஷ் வர்மா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தில், "5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது கவனம் செலுத்தப்படவில்லை. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட விவசாயிகள், வேலையில்லாதோர் புறக்கணிக்கப்பட்டனர். இதன் காரணமாக கட்சி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.